இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள்


-01. மர்ஹூம் என். முகம்மது சுபைர்


மர்ஹூம் முகம்மது சுபைர் அவர்கள் 1962.01.05ஆம் திகதி நாகூரான் – ஆமினா உம்மா தம்பதிகளின் புதல்வராக கிண்ணியா, குட்டிக்கரச்சையில் பிறந்தார்.

கிண்ணியா மத்தியில் கல்வி கற்ற இவர் 1989இல் ஆசிரியர் நியமனம் பெற்றார்.வானாறு புகாரி மகா வித்தியாலயத்தில் ஆசிரியராகக் கடமையாற்றிய இவர் 1991, 92 ஆம் கல்வியாண்டு ஆசிரியர் பயிற்சிக்காக அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்குத் தெரிவு செய்யப்பட்டார்.

மர்ஹூம் என்.முகம்மதுசுபைர்

இவர் கடந்த 1992.08.28 ஆம் திகதி அட்டாளைச்சேனை ஆசிரியர் கலாசாலைக்கு செல்வதற்காக திருகோணமலை பஸ் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பஸ் வண்டியில் அமர்ந்திருந்த வேளையில் அப்பஸ் வண்டி பயங்கரவாதிகளின் குண்டு வெடிப்புக்கு இலக்கானது. அதில் படுகாயமடைந்த இவர் திருகோணமலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு 10 தினங்களின் பின் காலமானார்.

அந்த வகையில் இனப்பிரச்சினையினால் காலமான அப்பாவிகளுள் ஒருவராக இவர் விளங்குகின்றார். மிகவும் அமைதியான சுபாவம் கொண்ட இவர் எப்போதும் மென்மையாக நடந்து கொள்வார். யாருடைய மனதையும் புன்படுத்தும் அளவுக்கு இவர் நடந்து கொண்டது கிடையாது.

கிண்ணியா மத்திய கல்லூரியில் இவர் கல்வி கற்ற காலத்தில் மாணவர் தலைவராக செயற்பட்டுள்ளார். அப்போது நானும் அங்கு கல்வி கற்றிருக்கிறேன். மாணவர் தலைவரான இவர் மாணவர்களுடன் கடிந்து கொண்டதை ஒரு போதும் நான் காணவில்லை. எல்லா மாணவர்களையும் அன்பினால் அடக்கி தனது பணியை திறம்பட செய்தார்.

தப்லீக் ஜமாஅத்தில் ஈடுபாடு கொண்ட இவர் மிகவும் பேணுதலோடு நடந்து கொள்வார். ஆசிரியர் கலாசாலையில் இரண்டாம் வருட ஆசிரியர் பயிற்சியாளர்கள் முதலாம் வருட பயிற்சியாளர்களுக்கு ராக்கிங் செய்வது வழக்கம். எனினும் இவர் எந்த ஒரு மாணவருக்கும் ராக்கிங் செய்தது கிடையாது. நான் முதல் வருட பயிற்சி ஆசிரியராக இருந்த போது இவர் இரண்டாம் வருட பயிற்சி ஆசிரியர் என்ற வகையில் என்னால் இதனை உறுதியாகக் கூற முடிகின்றது.

கலாபூசணம் ஏ.எம்.எம்.அலியின் புதல்வி நஜீமா பரூம் இவரது வாழ்க்கைத் துணைவியாவார். முகம்மது சிஹான், முகம்மது ஹிஸான், பாத்திமா நிஸ்மின் ஆகியோர் இவரது புதல்வர்களாவார்.
இவரது புதல்வி பாத்திமா நிஸ்மின் பிறந்து 4ஆம் நாளன்றே இவர் குண்டு வெடிப்பில் படு காயமுற்றார். தனது 30 வது வயதில் இவர் காலமானார். இவரது ஜனாஸா பெரிய கிண்ணியா பொது மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இளம் குடும்பத்தை இளம் வயதில் பிரிந்து சென்ற இவரது கப்றறை வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்.அல்லாஹும்மஹ் பிர்லஹு வர்ஹம்ஹு


ஆய்வு: ACM. முஸ்இல்

Please follow and like us:

3 thoughts on “இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள்

 • March 31, 2019 at 6:34 pm
  Permalink

  அருமையான முயற்சி.தேடிப் பெற்று
  நூலாக்குக. பின்னவர்களுக்குப் பயனுடையதாக
  தாக இருக்கும். பணி தொடர வாழ்த்துக்கள்

  Reply
  • April 3, 2019 at 5:15 pm
   Permalink

   நன்றி, உங்களைப் போன்ற நற்பிரஜைகளின் ஆசிர்வாதமும் ஒத்துழைப்பும் எமக்குத் தேவை. என்றென்றும் எமக்கு துணையாகவும் பக்கபலமாகவும் இருக்க வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம் இவ்வண்ணம் நிர்வாகக்குழு

   Reply
 • April 1, 2019 at 1:03 am
  Permalink

  அஸ்ஸலாமு அலைக்கும் நலமுற்றோங்க அல்லாஹ் நல்லருள் பாலிப்பானாக.
  போற்றற் குரிய முயற்சி. மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் KN1st
  ஊடாக நீங்கள் அறிமுகஞ் செய்யும் மர்ஹும்கள் வரிசையில் எனது
  மருமகன் என்.எம். சுபைர் அவர்கள் பற்றியும் எழுதி இருந்தீர்கள். மிக்க நன்றி. இவர் போலும் எழுதி அடையாளங் காட்டப் படவேண்டய மர்ஹும்கள் இன்னும் பல பேர்கள் உங்கள் நெஞ்சில் இருப்பார்கள். அவர்கள் பற்றியும் எழுதி நூலாக்குங்கள் .அல்லாஹ் அருள் புரிவானாக.

  Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *