இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (03).

மர்ஹூம் முகம்மது இப்னு பஸீர்

முன்னர் சேனைக்காடு என்று அழைக்கப்பட்ட மாஞ்சோலைச்சேனையை வசிப்பிடமாகக் கொண்டிருந்த மர்ஹூம்களான அப்துல் றஹீம் – ஜெய்னா பீவி தம்பதிகளின் புதல்வரான மர்ஹூம் முகம்மது இப்னு பஸீர் 1960.02.25 ஆம் திகதி பிறந்தார்.

தற்போதைய அல்ஹிரா மகளிர் மகா வித்தியாலயம் அப்போது கலவன் பாடசாலையாக இருந்தது. இப்பாடசாலையில் தரம் 5 வரை இவர் கல்வி கற்றார்.

சிறு வயது முதல் மிகவும் கெட்டிக்காரராக விளங்கிய இவர் தரம் 3 இலிருந்து தரம் 5 க்கு இரட்டை வகுப்பேற்றம் பெற்றார். தரம் 6 க்கு அல் அக்ஸா கல்லூரியில் சேர்ந்தார். அங்கு கல்வி கற்றுக் கொண்டிருக்கும் காலத்தில் இவரது தந்தையின் இயலாமை காரணமாக குடும்பம் வறுமை நிலைக்கு தள்ளப்பட்டிருந்தது. இதனால் படிப்பை இடைநிறுத்தி குடும்ப வறுமையைப் போக்க சிறுவயதிலேயே உழைக்க வேண்டிய நிர்ப்பந்தம் இவருக்கு ஏற்பட்டது.

இதற்காக கடற்றொழில் இவருக்கு கைகொடுத்தது. முழுநேர மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டார். இவரது உழைப்பின் மூலம் இவரது குடும்பத்தினர் ஓரளவு நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டது. குடும்பத்திலுள்ள சகோதர சகோதரிகளின் தேவைகள் பலவற்றை இவரால் நிறைவு செய்து கொடுக்க முடிந்தது.

இதனால் இவரால் உரிய வயதில் திருமணம் முடிக்க முடியவில்லை. தனது 30வது வயதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ரபீக்கா உம்மா என்பவரை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இந்த இல்லற வாழ்வு மூலம் பாத்திமா அமல், முகம்மது வஸீம் என இரண்டு பிள்ளைகள் இவர்களுக்கு பிறந்தனர்.

1993.02.20 ஆம் திகதியன்று வழமை போல தனது சகதொழிலாளர்களான சமான், நஸார், நூர்முகம்மது, காலிதீன் ஆகியோரோடு சம்பூர் பகுதி கடலுக்கு இவர் மீன்பிடிக்கச் சென்றார். அன்று சென்ற இவரும் இவருடன் சென்ற சகதொழிலாளர்களும் இன்று வரை மீளத் திரும்பவில்லை. இவர்கள் சென்ற படகு விபத்துக்குள்ளானதற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவுமில்லை.

எனவே, பயங்கரவாதிகளால் இவர்கள் கடத்திச் செல்லப்பட்டு கொல்லப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் அன்று முதல் இன்றுவரை பரவலாக நிலவி வருகின்றது. அப்பாவியான மர்ஹூம் இப்னு பஸீர் தனது 33 வது வயதில் தனது இளம் மனைவியையும் 3 வயது மற்றும் 1 வயது நிலையிலிருந்த இரண்டு பிள்ளைகளையும் விட்டும் பயங்கரவாதிகளால் காணாமலாக்கப்பட்டு விட்டார்.

கலகெதரயில் வசிக்கும் ஓய்வுபெற்ற ஆசிரிய ஆலோசகர் அப்துல் லெத்திப், பரீதா உம்மா, சித்தி சாஹிரா, தௌபீக், ஆயிஷா உம்மா, அப்துல் மஜீத் வித்தியாலயத்தில் தற்போது கடமை புரியும் ஆசிரியர் இனிஷாத் ஆகியோர் இவரது சகோதரர்கள்.

தனது 33வது வயதில் காணாமலாக்கப்பட்ட இவரது மறுமை வாழ்வு சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம்அல்லாஹூம்மஹ் பிர்லஹூ வர்ஹம்ஹூ

தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்


Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *