இனப்பிரச்சினையால் இழந்த உறவுகள் (04) மர்ஹூம் ஜே.அப்துல் வாஹித்


பெரிய கிண்ணியா டெலிகொம் முன்பகுதியை வசிப்பிடமாகக் கொண்டிருக்கும் ஜமால்தீன் – உம்முசல்மா தம்பதிகளின் புதல்வர் மர்ஹம் அப்துல் வாஹித் 1957.06.15 ஆம் திகதி பிறந்தார். தனது ஆரம்பக்கல்வியை பெரிய கிண்ணியா ஆண்கள் வித்தியாலயத்தில் கற்ற இவர் இடைநிலைக் கல்விக்காக கிண்ணியா மத்திய கல்லூரியில் சேர்ந்தார். க.பொ.த (சாதாரணதரம்) வரை கல்வி கற்றார்.

இந்நிலையில் இலங்கை மின்சார சபையில் இவருக்கு வேலை கிடைத்தது. சாதாரண ஊழியராக பணியில் இணைந்த இவர் தனது அயரா உழைப்பின் மூலம் மானி வாசிப்பாளராக பதவியுயர்வு பெற்றார். மிகவும் கலகலப்பான இவர் எல்லோருடனும் எப்போதும் சிநேகபூர்வமாக உரையாடும் தன்மை உடையவர். பொதுப்பணிகள் புரிவதிலும் ஆதிக ஆர்வம் காட்டி வந்தார்.

தூய்மையை விரும்பும் இவர் எப்போதும் தூய்மையான ஆடைகள் அணிவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். மாஞ்சோலைச்சேனையைச் சேர்ந்த தனது உறவுக்காரரான பக்கீர் – சித்தி ஜரீனாவை தனது வாழ்க்கைத் துணைவியாகக் கொண்டார். இந்த இல்லற வாழ்வு மூலம் ஹஸ்ஸானா பர்வின் என்ற மகள் இவர்களுக்கு பிறந்தார். தற்போது இலங்கைத்துறைமுக அதிகார சபையில் பணிபுரியும் பக்கீர் முகம்மது மாஹிர் இவரது மைத்துனர்.

1989ஆம் ஆண்டு சொந்த வேலை காரணமாக இவர் குருணாகலுக்குச் சென்றிருந்தார். அங்கிருந்து ஹபறன வரை பஸ் வண்டியில் வந்தார். ஹபறனயிலிருந்து திருகோணமலைக்கான பஸ் வண்டிக்கு காத்திருந்த வேளையில் திருகோணமலைக்கு செல்லும் ஒரு குடும்பத்தினர் காரில் வந்தனர். அவர்கள் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதால் திருகோணமலைக்குப் புதியவர்கள். எனவே, இவரிடம் திருகோணமலை பற்றி விசாரித்ததோடு இவரையும் தங்களது காரில் ஏற்றிக்கொண்டு பயணத்தைத் தொடர்ந்தனர். அன்றைய நாள் 06.05.1989 அவரது வாழ்க்கையின் கடைசி நாளாக இருந்தது.

காரில் வந்த மர்ஹூம்ம் அப்துல் வாஹித் வீடு வந்து சேரவில்லை. தேடுதல் பணிகள் குடும்பத்தினரால் முன்னெடுக்கப்பட்டன. பலன் கிடைக்கவில்லை.
இரு தினங்களின் பின்னர் இவரது ஜனாஸா ஹபறன காட்டுப்பகுதியில் இருப்பதாகத் தகவல் கிடைத்தது. அங்கு சென்ற உறவினர்கள் இவரது ஜனாஸாவை அடையாளம் கண்டனர். வீட்டுக்கு எடுத்துவரும் நிலையில் ஜனாஸா இருக்காத காரணத்தினால் உறவினர்களால் அங்கேயே இவரது ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டது.

இனந்தெரியாத கும்பலொன்று இவரையும் இவரோடு வந்த ஏனையோரையும் கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் இவரது குடும்பத்தினரிடம் இன்றும் நிலவி வருகின்றது. அப்பாவியான மர்ஹம் அப்துல் வாஹித் தனது 32 வது வயதில் தனது இளம் மனைவியையும், மகளையும் விட்டும் இந்தக் கும்பலினால் பிரிக்கப்பட்டு விட்டார். தனது 32வது வயதில் கொல்லப்பட்ட இவரது கப்றறை வாழ்வும், மறுமை வாழ்வும் சிறப்பாக அமைய அல்லாஹ்விடம் பிரார்த்திப்போம் அல்லாஹும்மஹ் பிர்லஹு வர்ஹம்ஹு

தேடல்:
ஏ.ஸீ.எம்.முஸ்இல்

Please follow and like us:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *